இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு - கடும் நெருக்கடியில் மக்கள் ஜுலை - 09, ஞாயிறு - 2023 நாடளாவிய ரீதியிலுள்ள சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இறைச்சி, மீன், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், அந்த நிவாரணத்தை மோசடி வியாபாரிகள் நுகர்வோருக்கு வழங்காத நிலை காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சில வியாபாரிகள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களுக்குத் தன்னிச்சையான விலையை வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் எவ்வளவு குறைக்கப்பட்டாலும் நுகர்வோர் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்காது...